Homeஉள்நாடுவிளையாட்டுத்துறை அமைச்சு வசமாகும் நோர்வூட் மைதானம்!

விளையாட்டுத்துறை அமைச்சு வசமாகும் நோர்வூட் மைதானம்!

நுவரெலியா நோர்வூட் மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பொறுப்பாக்குவதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் 2022 முதல் 2024 ஆண்டுக்கான நிதி நிலைமைகள் கணக்காய்வு செய்யப்படுகிறது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

அத்துடன் தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் உட்பட இணை நிறுவனங்களின் சொத்து தொடர்பான விபரங்களை சபைக்கு சமரப்பித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

“2005 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. தொண்டமான் பயிற்சி நிலையம், கலாச்சார நிலையம் , மற்றும் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றுக்கு பணியாட்டொகுதி 217 ஆக காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 181 பேர் இந்த நிறுவனங்களில் சேவையாற்றுகிறார்கள்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 கட்டிடங்கள், 54 கணினிகள், 940 மேசைகள் மற்றும் கதிரைகள், 114 அலுமாரிகள், 3 முச்சக்கர வண்டிகள், 3 நகல் எடுப்பு இயந்திரங்கள், 1 மின்பிறப்பாக்கி, 15 மோட்டார் சைக்கிள்கள், 17 அச்சு இயந்திரங்கள், 4 நீர் நிரப்பிகள், சிற்றுண்டிச் சாலையில் 160 மேசை மற்றும் கதிரைகள், 1 நீர் பௌசர், 416 கட்டில்கள் மற்றும் மெத்தைகள், 662 மெத்தைகள் மற்றும் சமையலறை பொருட்கள் 5296 காணப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டு மூலதனம் 0.5 மில்லியன் ரூபாவாகவும், தொடர் செலவுகள் 180 மில்லியன் ரூபாவாகவும், 2021 ஆம் ஆண்டு மூலதனம் 1.5 மில்லியன் ரூபாவாகவும், தொடர் செலவுகள் 172 மில்லியன் ரூபாவாகவும், 2022 ஆம் ஆண்டு மூலதனம் 30 மில்லியன் ரூபாவாகவும் தொடர் செலவுகள் 160 .2 மில்லியன் ரூபாவாகவும், 2023 ஆம் ஆண்டு மூலதனம் 14.1 மில்லியன் ரூபாவாகவும், தொடர் செலவுகள் 125 மில்லியன் ரூபாவாகவும், 2024 ஆம் ஆண்டு மூலதனம் 15 மில்லியன் ரூபாவாகவும், தொடர் செலவுகள் 125 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.

ஏனைய நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அத்துடன் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான நிதி கணக்காய்வு தற்போது தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் உறுப்பினர் மஞ்சுள சுரவீர, நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான சூழல் அதிகளவில் காணப்படுகிறது. விளையாட்டுத் துறை தொடர்பான அதிகாரங்களும் தொண்டமான் மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோர்வூட் விளையாட்டு மைதானம் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் முக்கியமானது. உதைப்பந்தாட்ட போட்டியை நடத்துவதற்கு இந்த மைதானத்தின் தரம் சிறந்ததாக உள்ளது. இந்த மைதானத்தை தொண்டமான் மன்றம் கைப்பற்றியுள்ளது.

இதனால் அப்பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏதேனும் விளையாட்டு போட்டி நடத்தப்படும் போது அதற்கு 15000 ரூபாய் அறவிடப்படுகிறது. இதனால் தொண்டமான் மன்றம் வளர்ச்சி பெறுகிறது. தமது குடும்ப சொத்தாக பயன்படுத்தப்படுகிறது. இதனை மாற்றியமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த பிரதி அமைச்சர் பிரதீப், “நுவரெலியா நோர்வூட் மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பொறுப்பாக்குவதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் நாட்களில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்போம்” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular