Homeஉள்நாடுதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது எனவும், நாட்டில் வன்முறை கலாசாரமும், கொலைகளும் தலைவிரித்தாடுகின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தெரணியகல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரஞ்சித் பொல்கம்பொலவின் ஏற்பாட்டில் தெரணியகல பிரதேசத்தில் இன்று (23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ சமூகத்தில் சட்டம் மேலோங்கி காணப்பட வேண்டிய இன்றைய காலகட்டத்தில் சட்டம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது.
கொலையாளிகள் நாட்டின் சட்டம் ஒழுங்கின் தலைவர்களாக மாறிவிட்டனர். இந்த கொலைக் கலாச்சாரம், தேசிய பாதுகாப்பு தொடர்பில் வீராப்பு பேசிய இந்த அரசிடம் இதற்கான பதிலும் இல்லை, தீர்வும் இல்லை.

எனவே, இந்தக் கொலைக் கும்பல்களையும், போதைப் பொருளை மையமாகக் கொண்ட ஆயுதக் கும்பல் நடவடிக்கைகளையும் அரசால் கையாள முடியாதுபோயுள்ளது. இதன் உச்சமாக நீதிமன்றத்தினுள் கூட கொலை இடம்பெறுகின்றது.
வீதிகளில் செல்லும் சாதாரண மக்களின் கதி என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் கொலைக் கலாச்சாரத்தை முறியடிக்க எதிர்க்கட்சியாக நாம் எமது பூரண ஆதரவை பெற்றுத் தருவோம்.

இதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால், வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்திற்கு நல்லதொரு பாடத்தை படிப்பிக்க எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துங்கள்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular