Homeஉள்நாடுயாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றியவர்களை கைது செய்க!

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றியவர்களை கைது செய்க!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடியை கீழிறக்கி கறுப்புக்கொடியை ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் விளக்கம் கோரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்கு பதிலாக கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. உதயன் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களில் இது தொடர்பான செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய பல்கலைக்கழகத்தின் பிரதான கம்பத்தில் இருந்த கொடியே கீழ் இறக்கப்பட்டு, கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

போரில் இருந்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த இராணுவத்தை அவமதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.

எனவே, இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
இதற்கு இடமளித்தமை குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் குழாமும் பொறுப்புக்கூற வேண்டும். இது தொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகமும் மக்கள் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றது. எனவே, தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோருகின்றோம்.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக ஜனாதிபதி யாழ். சென்றார், மக்களுடன் கலந்துரையாடினார். இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக அறிவித்திருந்தார். எனவே, தேசியக் கொடியை அவமதித்து, தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் தேசியக் கொடியை ஏற்க மறுப்பவர்களை தேசத்துரோகிகளாகவே கருத வேண்டும். இவர்களுக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது பற்றி புலனாய்வு பிரிவு ஆராய வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular