இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இஸ்ரேல் மீது ஈரான்
தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், இந்த ஹிட் லிஸ்ட் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிப்பதாக இருக்கிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் திட்டமிட்டுக் கொன்றது. இது ஈரானை ஆத்திரப்படுத்தியது. இஸ்ரேல் மீது நேரடியாக ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்க எங்கு அடுத்த உலகப் போர் வெடிக்குமோ என்ற அச்சம் உலகெங்கும் எழுந்தது. இதற்கிடையே ஈரான் ஹிட் லிஸ்டில் சில முக்கிய இஸ்ரேல் தலைவர்களின் பெயர்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இஸ்ரேல் நாட்டின் டாப் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் ஒரு ஹிட் லிடஸ்ட்டை உருவாக்கியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரின் பெயர்களும் இந்த ஹிட் லிஸ்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஹிட் லிஸ்ட் தொடர்பாக இதுவரை ஈரான் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இருப்பினும், இந்த ஹிட் லிஸ்ட் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட டாப் தலைவர்கள் ஈரானின் ஹிட் லிஸ்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாக இந்த லிஸ்டில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் பெயர் உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவுக்கு செல்லும் அனைத்து சரக்குகளையும் முடக்க இவர் தான் உத்தரவிட்டிருந்தார். இதனால் காசா மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் உருவானது. அதன் பிறகு இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டு மழை பொழிந்தன. இதற்கு முழுக்க முழுக்க கேலன்ட் தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அவரை பாலஸ்தீனியர்களை பயங்கரமான விலக்கு என்றே விமர்சித்தனர்.
ஈரான் நாட்டில் தற்போது உட்சபட்ச தலைவராக அலி கமேனியின் அதிகாரங்களை காலி செய்ய இஸ்ரேல் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நேரடி பதிலடியாகவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பெயரை ஹிட் லிஸ்டில் முதலில் ஈரான் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் கொன்று வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த லிஸ்டை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும், தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இஸ்ரேல் மீது அல்லது இஸ்ரேல் தலைவர்கள் மீது நேரடியாக இந்தளவுக்குத் தீவிர தாக்குதலை ஈரான் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் மோதல் என்பது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைக்க ஆர்வம் காட்டுகின்றன.