சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.