ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது கியூபா தூதுவர், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பாராட்டிய இலங்கைக்கான கியூபா தூதுவர், இலங்கையுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த கியூபா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயை அடக்குவதில் கியூபா அடைந்துள்ள வெற்றியை சுட்டிக்காட்டிய இலங்கைக்கான கியூபா தூதுவர், இலங்கையில் டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு கியூபா அரசாங்கம் ஒத்துழைக்கவும் தேவையான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.