இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய முகவர்களின் ஊடுருவல் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் இடையே கவலை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நஸ்ரல்லாவின் படுகொலையை அடுத்து கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தத் தியாகியின் இரத்தத்திற்கு பதில் அளிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.
ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் வோக்கி டோக்கி மற்றும் பேஜர் உபகரணங்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து அனைத்து தொடர்பாடல் சாதனங்களையும் சோதனைக்கு உட்படுத்த பாரிய அளவான நடவடிக்கை ஒன்றை ஈரான் புரட்சிக் காவல் படை முன்னெடுத்துள்ளது. இந்த உபகரணங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்லது சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று ஈரான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.