போரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக தலைவர் கலாநிதி செய்த்னா முஃப்த்தால் சேய்ஃபூத்தீன் சஹாபி (Dr Syedna Mufaddal Saifuddin) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மில்லியன் சனத் தொகையை கொண்ட போரா சமூகத்தினர் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதியை சந்தித்த போரா சமூகத்தின் ஆன்மீக தலைவர், தான் மிகவும் விரும்பும் இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்காலத்திலும் தனது சீடர்களுடன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள கோவிட் தடுப்பு வேலைத்திட்டத்தை பாராட்டியுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக தலைவர், இலங்கையின் முன்னேற்றமே தனது எதிர்பார்ப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கோவிட் நிதியத்திற்கு போரா சமூகத்தின் ஆன்மீக தலைவர் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி, வர்த்தகத்தில் ஈடுபட்ட போரா சமூகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வழங்கி வரும் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.