பாகிஸ்தான் நாட்டில் நாளுக்கு நாள் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது மட்டுமல்லாது கல்வியின் தரமும் மோசமாக இருக்கிறது. இந்நிலையில் இவற்றை மேம்படுத்த இந்தியாவின் கல்வி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த போருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க கல்வியறிவு மிக முக்கியம். எந்தெந்த நாடுகளின் கல்வியறிவு பெரும் அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறதோ, அந்த நாடுகளின் பொருளாதாரம் சீரானதாக இருக்கிறது என்பது ஆய்வு ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானும் இணைந்திருக்கிறது. பாகிஸ்தானில் சுமார் 2.6 கோடி குழந்தைகள் பாடசாலை செல்லாமல் இருக்கின்றனர். இது அந்நாட்டிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பிரச்சினையை தீர்க்க, தீர்வை முன்மொழிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற வங்கி, இந்திய கல்வி திட்டத்தை பின்பற்றுமாறு அறிவுத்தலை வழங்கியுள்ளது.
அதாவது இந்தியாவில் ‘உல்லாஸ்’ (ஒருங்கிணைந்த கற்றல் மற்றும் கற்றல் மதிப்பீட்டு முறை – ULLAS) கல்வி திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இது பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கல்வியியல் கண்டுபிடிப்புகள் மூலம் கல்வி அனுபவத்தை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும்.
ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ப, கல்வி உள்ளடக்கத்தை மாற்றியமைக்கும் கற்றல் தொழில்நுட்பங்களை இந்த அமைப்பு கொண்டிருப்பதும், மத்திய, மாநில அரசுகளை இணைத்து கல்வி இலக்குகளை அடையும் வகையிலும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இதன் சிறப்பம்சமும் கூட. எனவே, இதனை பாகிஸ்தான் பின்பற்றுவதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை நீடித்து வந்திருந்தது. தற்போது புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் சூழல் மாறியிருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் கல்வியில் பெரும் பாய்ச்சல் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் பாகிஸ்தான், ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ஆலோசனை கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.