நாட்டைப் பாதுகாத்து, உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்த
நாட்டை மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என லக்ஜன பெரமுனவின் தலைவர் சிந்தக வீரகோன் தெரிவித்திருந்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிந்தக வீரகோன்,மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லக்ஜன பெரமுனவின் தலைவர் சிந்தக வீரகோன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“.. இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தருணத்தில் இந்நாட்டு மக்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இந்த தருணத்தில் சரியான முடிவை எடுத்தால் நாடு முன்னேறும். தவறான முடிவு எடுத்தால் நாடு எங்கே போகும் என்று யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது.
இந்த நாட்டை யாரால் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டை ஆள, ஒருவருக்கு சிறப்புத் திறமையும், அறிவும் இருக்க வேண்டும். அந்த புத்திசாலித்தனமும் திறமையும் அறிவும் கொண்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதைக் கூற வேண்டும்.
இந்த நேரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரே தலைவர் அவர்தான். நாட்டைப் பாதுகாத்து உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் அவர்தான் என்பது லக்ஜன பெரமுன உறுப்பினர்களின் கருத்து மட்டுமல்ல. அரசியல் ரீதியாக மக்கள் பிளவுபட்டாலும், பெரும்பாலான மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து இருப்பவர்கள். அமைதியாக இருப்பவர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
1977 ஆம் ஆண்டு வெளிவிவகார பிரதி அமைச்சராகவே ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன்பின், நீண்ட அரசியல் முதிர்ச்சியும், பல்வேறு அமைச்சுகளைப் பொறுப்பேற்ற அனுபவமும் கொண்ட தலைவர் அவர். ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பக்குவம் கொண்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. வரலாற்றில் முதன்முறையாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஒரு அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டவர். இன்றைய நாளை விட நாளை அவரது பெறுமதியை நாம் உணர்வோம்..”