ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி திரண்டுள்ளவர்களில் 50%இற்கும் அதிகமானோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என ஜனநாயக மக்கள் சக்தியின் செயலாளர் சமன் பத்திரன தெரிவித்திருந்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமன் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் சக்தியின் செயலாளர் சமன் பத்திரன தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“.. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது அமைப்பின் பூரண ஆதரவை வழங்க அனைவரும் தீர்மானித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்கள் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைகளில் வாங்க எந்தப் பொருளும் இருக்கவில்லை. மருந்து இருக்கவில்லை. மின்சாரம் இன்றி பிள்ளைகளுடன் தவிக்கும் போது, எரிபொருள் வரிசையிலும், கேஸ் வரிசையிலும் மக்கள் எப்படி இறந்தார்கள் என்பது எமக்குத் தெரியும்.
நோய்வாய்ப்பட்ட ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத காலம் இருந்ததை இந்நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி, திரண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இதை நினைவில் கொள்ள வேண்டும். பச்சை நிறத்தை விரும்புவோர் யானையை விரும்புபவர்கள், கட்சியை நேசிப்பவர்கள் எனில், எதிர்வரும் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி திரண்டுள்ளவர்களில் 50%இற்கும் அதிகமானோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்…” என்றார்.