ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தடுப்பூசிக்கு நேற்று அனுமதி வழங்கியது.
தடுப்பூசி தேவைப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகளவில் கொள்முதல், நன்கொடை போன்றவை வாயிலாக விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.