செப்டம்பர் 18-ம் திகதி பிரச்சார நடவடிக்கைகளுக்கு காலக்கெடு முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறை சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“.. நாட்டில் வன்முறைச் சம்பவங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்றனர். .இந்த அரசியல்வாதிகள் தாமே வன்முறைகளை வெடிக்கச் செய்துவிட்டு அவற்றை தேசிய மக்கள் சக்தியே செய்ததாக கூறுவார்கள் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது” என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறுபவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து, அது எவ்வாறு அவர்களுக்குத் தெரிய வந்தது என்பதைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினரிடம் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
“செப்டம்பர் 18க்கு பிறகு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றி பேச ஊடக நிறுவனங்களும் சிரமங்களை எதிர்கொள்ளும்.
அப்போது இந்த அரசியல்வாதிகள் தங்கள் சதிகாரர்களை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி ஆக காட்டிக்கொண்டு வன்முறை சம்பவங்களை உருவாக்குவார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஈஸ்டர் தாக்குதலை உருவாக்கியவர்களுக்கு இது பெரிய விடயம் அல்ல” எனவும் அவர் கூறினார்.