இன்றிருப்பது நாம் 2019 இல் இருந்த நாடல்ல. நாம் மேற்கொள்ளும் எந்தச் செயற்பாட்டிற்கும் எதிர்க்கட்சி எந்தப் பாராட்டையும் தெரிவிப்பதில்லை. அவர்கள் இந்த முழு விவகாரத்தையும் தவறாகத்தான் பார்க்கிறார்கள் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (11) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாம் நரகத்தின் இடைவேளையில் இருக்கிறோம்.” என எதிரணி சொன்ன விடயம் உண்மைதான். நாங்கள் மிகவும் கடினமான பயணத்தில் இருக்கிறோம். இதே பாதையில் சென்றால் மீளலாம். கொஞ்சம் நகர்ந்தாலும் உடைந்து விழும்.
இந்தப் பிரச்சினையை சஜித் பிரேமதாச சிறுபிள்ளைத்தனமாகத் தீர்க்க முயற்சிக்கிறார். கடன் நிலைத்தன்மை தொடர்பில் மீள பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திசைகாட்டி கூறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு இரண்டு வருடம் சென்றது. அவர்களின் பேச்சுவார்த்தையினால் அடுத்த 5 மாதங்களில் எமக்குக் கிடைக்க இருக்கும் 1.3 பில்லியன் டொலர் நிறுத்தப்படும்.. டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும். அடுத்து என்ன நடக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்துபார்க்கலாம்.
மக்களை ஏமாற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் கூறிவருகிறார். அவர் பயமின்றி கடினமான முடிவுகளை எடுத்தார்.
அன்று சித்திரம் வரைந்த இளைஞர்கள் தான் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். உணர்வுபூர்வமாக செயற்படாமல் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசுக்குக் கிடைக்கும் 70 வீத வருமானம், அரச ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றுக்கே செலவாகிறது. திருட்டு பற்றி சில வேட்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். திருடிய பணம் கிடைக்கும் வரை எத்தனை வருடங்கள் காத்திருக்கப் போகிறீர்கள். இரண்டு அடி முன்னோக்கிச் சென்று ஒரு அடி பின்னோக்கிச் செல்லாது ஸ்தீரமான நாட்டை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.