தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்கக் கோரி முன்வைத்துள்ள மறுசீரமைப்பு விண்ணப்பத்திற்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
குறித்த மனு மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஹிஸ்புல்லாவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர், தமக்கு கட்சிக்காரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளதாக ரொமேஸ் டி சில்வா குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது இந்த மனு தொடர்பில் தாம், ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக சட்டமா அதிபரின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், மனுவின் விசாரணையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.