இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்த போதிலும், அந்த தீர்மானத்தில் தாம் உடன்படவில்லை என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் அப்துல்லா மஹ்ருப் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் புதியதல்ல எனவும், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமது கட்சியின் உயர்பீட சபை தீர்மானிப்பதற்கு முன்னரே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமது கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனுக்கு அறிவித்துள்ளதாகவும் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.
“எனது ஆதரவாளர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் ஆறு மாதங்களாக கூறி வருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று.. அவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாசவை நான் எவ்வாறு ஆதரிக்க முடியும்? மற்றொன்று என்னவென்றால், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது எண்ணெய் வரிசைகள் மற்றும் எரிவாயு வரிசைகளின் சகாப்தத்தை யார் அகற்றினார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். மீண்டும் அந்த நெருக்கடிக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சஜித்துக்கு ஆதரவை தெரிவித்துவிட்டு சஜித் ஆட்சிக்கு வந்தால், நாடு பொருளாதார ரீதியாக அராஜகமாக மாறுவதுதான் மீண்டும் நடக்கும்” என தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.