பயிர் சேத இழப்பீடாக தற்போது அரசாங்கத்தினால் இலவசமாக ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் 40,000 ரூபாவை ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்குமாறு பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
விவசாயப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (20) பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் விவசாய அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அந்த சேதத்திற்காக ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையான 40,000 ரூபாயை 100,000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும்.
இதன்படி, பயிர் சேதமுறும் ஒரு ஹெக்டெயருக்கு 250,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும்.
இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், ஏக்கருக்கு 100,000 ரூபா பயிர் சேத நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.