ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் கல்விக்குக் கூட ஒத்துழைப்பு வழங்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருந்தது. அப்போது, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளை உள்ளடக்கிய கல்வி அமைச்சை பொறுப்பேற்குமாறு அப்போதைய பிரதமர் என்ற வைகயில் ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்ற ‘இலங்கையின் உயர்கல்வியை அபிவிருத்தியடைந்த தேசத்திற்கு மாற்றியமைத்தல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு, 14 மணி நேர மின்வெட்டு, காலதாமதமான பரீட்சைகள், சீருடை, பாடப்புத்தகங்கள் போன்ற பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், எமது அமைச்சரவை, அரச அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிபுணர்களின் ஆதரவுடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. இன்று, இலங்கை கல்வியின் எதிர்காலம் குறித்து ஆராய 750 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்று திரட்டியிருப்பதையிட்டு பெருமை கொள்கிறோம்.
பொதுக் கல்வி, தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்கும் மாற்றுவதற்கும் திட்டங்களை தயாரிப்பதற்குமான முக்கிய திருப்புமுனையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
ஜனாதிபதி, முன்னாள் உயர்கல்வி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் உப வேந்தர்கள், உப வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் (CVCD) உறுப்பினர்கள், அரச சார்பற்ற உயர்கல்வி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளனர்.
17 அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், 5 அரச உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் கல்வி முறையை முன்னேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் தெரிவித்தார்.