தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தனது பாதுகாப்பில் அதிக அக்கறை கொள்வதில்லை என தெரிவித்ததோடு, தேர்தலில் போட்டியிடுவதற்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் உரிமை உண்டு என நேற்று (13) தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மக்கள் கருத்து உருவாக்கப்படுமானால் அவ்வாறான அரசியல் சூழலை தோற்கடிக்க வேண்டும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் பாதுகாப்பைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கும், எங்களின் செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் எங்களுக்கு நியாயமான மற்றும் ஜனநாயக உரிமை உள்ளது..”
தேசிய மக்கள் சக்தி இந்த ஆண்டு மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்கள் ஏற்கனவே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரச்சாரம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்ல திட்டமிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி ஆகஸ்ட் 15 முதல் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் திட்டத்தை தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.