பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சங்கங்கள் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டங்களை எதிர்கொண்டு, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார், இராணுவம் போராட்டக்காரர்களிடம் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக கூறியதை அடுத்து.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரே குரலில் கூறினர்.
அதன்படி, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், மாணவர் சங்க தலைவர்கள், முப்படைத் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.