வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 – 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் திட்டம் மற்றும் ‘யாழ்.நதி’ மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வுகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் நிலையமானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நடத்தப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி வங்கி (AFD) ஆகியவற்றின் உதவியுடன் யாழ்ப்பாணம் -கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் (JKWSSP) ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மட்டத்தில் 2.5 மில்லியன் நீர் இணைப்புகள் காணப்படும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மேலும் 60,000 இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 300,000 மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் 80,000 பேருக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உப்பு நீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கைசாத்திடப்பட்டது. இதுவரை, இருபது உயரமான நீர் தொட்டிகள் அமைத்தல், 186 கி.மீ பரிமாற்ற குழாய்கள் மற்றும் 382 கி.மீ விநியோக குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
உப்புநீக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் 2021 ஜனவரியில் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 266 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.