பங்களாதேஷில் கடந்த 15-ம் திகதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான பங்களாதேஷ தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை பங்களாதேஷ அரசு இன்று தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.