ஒன்லைன் ஊடாக 3000 அமெரிக்க டொலர் வரை பெறுமதியான மாணிக்கக் கற்களுக்கான கட்டளைகளை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்குக் கைத்தொழில் அமைச்சு பற்றிய ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கபட்டுள்ளது
“ஊடக அறிக்கை”
3000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதியான மாணிக்கக் கற்களை இணையத்தின் ஊடாக (ஒன்லைன்) ஓடர் செய்து கொள்வனவு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கைத்தொழில் அமைச்சு பற்றிய ஆலோசனைக் குழுவில் நேற்று (06) அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மீதான கட்டுப்பாடுகளால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இங்கு தெரியவந்தது. இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் அறவிடப்படும் 0.5 வீத கட்டணத்தை 0.25 வீதமாகக் குறைப்பது இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
1993ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் அடங்கிய 2165/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச, இரத்தினக்கல் மற்றும் தங்க
ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்த,
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்
கௌரவ தயாசிறி ஜயசேகர ஆகியோர் தலைமையில் நேற்று (06) நடைபெற்ற
இக்கூட்டத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக
உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இரத்தினபுரி ‘வேகங்க’ பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்அங்கு ஏற்பட்ட எதிர்ப்புப் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில்
கலந்துரையாடி, நாட்டுக்குப் பாரிய வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இத்திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டிக்காட்டினார்.
எலஹெர பிரதேசத்தில் இரத்தினக்கல் அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை
ஒழுங்குபடுத்துவதன் ஊடாகப் பொது மக்களை மாணிக்கக்கல் அகழ்வுத் தொழிலில்
இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் கைத்தொழில்கள்
தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்தை ஈர்த்தனர்.
அவற்றை உரிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உடனடியாக தீர்க்க
நடவடிக்கை எடுக்குமாறும், விரிவான அறிக்கைகளை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.