கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கம் மன்னிப்பு கோரியமை தொடர்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது, அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஓட்டமாவடி’ என்ற கொரோனா ஆவணப்படம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை நேற்று அறிவித்திருந்தது.
அது நல்லது. இப்போது அமைச்சரவையில் இருந்தவர்களும் அன்று கையை உயர்த்தினர். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையினை சிதைக்கும் வகையில் இனவாதத்தினை தூண்டும் வகையில் மத வாதத்தினை முன்னெடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து எரிப்பதா புதைப்பதா என்று வரும் போது தவறான தீர்மானத்தினை எடுத்திருந்தனர்.
நாங்கள் கொஞ்சமாவது அரசின் நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதாவது அரசுக்கு புரிந்ததே.. ஆனால், யார் கூறி இதை செய்தோம் என்று பகிரங்கப்படுத்த வேண்டும். யார் இவற்றுக்கு ஆலோசனை வழங்கியது என்பது தொடர்பில் வெளிக் கொணர வேண்டும்..
அரசியல் தலைமைகளை காப்பாற்ற இப்போது ஆவணப்படம் தயாரிக்கின்றார்களாம்.. வெட்கமாக இருக்கிறது, அந்த நாட்களில் வீதியில் இறங்க வில்லை. நாம் தான் முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கினோம். குரல் கொடுத்தோம். நாமே அதனை எதிர்த்தோம்..
வலுக்கட்டாயமாக முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்தமைக்கு அவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட வேண்டும். சும்மா மன்னிப்புக் கோரி இதிலிருந்து விலகியதாக நினைக்க வேண்டாம்..”