யேமனில் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் குண்டு வீச்சு தாக்குதல்கள் தோல்வியில் முடிந்துள்ளது. ஹவுதிகள் இந்தத் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்ததோடு, இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது.
ஹவுதி அமைப்பினர், 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேலிய-பலஸ்தீன மோதலில் பலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டனர். இதன் விளைவாக, இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்குவதற்காக அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய விமானப்படை யேமனின் ஹோடெய்டா துறைமுகத்தைத் தாக்கியுள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கும், முழு அளவிலான மோதலுக்கு வழிவகுப்பதற்கும் வாய்ப்புள்ளது.
ஜூலை 19ம் திகதி இஸ்ரேல் பிராந்தியத்தின் உள்ளே ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் ஹவுதிகளுக்கு அடையாள வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், ஹவுதிகளின் பலமும், அரசியல் செல்வாக்கும் உள்நாட்டிலும், பிராந்திய ரீதியாக உயர்ந்து வருகிறது.
ஹவுதிகளுக்கு எதிரான ஏழு மாத கால அமெரிக்க தலைமையிலான நடவடிக்கை பெரும் பொருட் செலவை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் எந்தப் பலனையும் தரவில்லை. இந்தத் தாக்குதல்களால் ஹவுதி தரப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல்கள் எதுவும் ஹவுதிகளை முடக்கி நிறுத்தவில்லை. இதனால், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கப்பல் கட்டணம்தான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூட இந்த தாக்குதல்கள் பயனற்றவை என்று ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் இந்த தாக்குதல்களை நிறுத்த மறுத்துவிட்டார்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ள அல்ஜசீரா ஊடக கட்டுரை, ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை நிறுத்த ஒரே வழி, இஸ்ரேலிய-பலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே என அறிவுறுத்துகிறது. ஆனால், அமெரிக்கா அதைச் செய்யத் தவறிவிட்டது. பைடன் நிர்வாகத்தின் மற்றொரு தோல்வி இதுவாகும் என்கிறது அந்த கட்டுரை.