இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது.
இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் காலத்துக்குக் காலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குளிர்ச் சங்கிலி உபகரணத் தொகுதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு வழங்கி வந்துள்ளன.
தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் என்பன ஏற்கனவே கையளிக்கப்பட்ட குளிர்ச் சங்கிலி உபகரணங்களாகும். அதன் தொடராகவே இன்று குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்படுகின்றன.