follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2நல்லாட்சியின் ஊழல் எதிர்ப்பு தலைவரான எனது நண்பர் அநுர அன்று வெற்று கோப்புகளையே காட்டினார்..- ஜனாதிபதி

நல்லாட்சியின் ஊழல் எதிர்ப்பு தலைவரான எனது நண்பர் அநுர அன்று வெற்று கோப்புகளையே காட்டினார்..- ஜனாதிபதி

Published on

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய அநுர குமார திஸாநாயக்க 400 மோசடி மற்றும் ஊழல் கோப்புகளை காட்டியுள்ள போதிலும், அவற்றில் 360 கோப்புகள் வெற்று கோப்புகள் எனவும், அசல் கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அநுர என்னிடம் 400 கோப்புகளைக் காட்டினார், அவை என்னிடம் உள்ளன. 400 கோப்புகளில் 40 கோப்புகளுக்கு வழக்குகள் தொடரப்பட்டன. மீதமுள்ள 360 கோப்புகளும் வெறுமையானவை. அதனை பார்க்க விரும்பும் யாராவது இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். 400 கோப்புகளைக் காட்டுவதற்குப் பதிலாக, 40 ஐக் காட்டியிருக்கலாமே..”

அரசியல் செய்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருளாதார கட்டமைப்பை உடைக்க எவரும் உழைக்கக்கூடாது என்றும் கடந்த சில வாரங்களிலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் அதன் பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,

“.. கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் அரசியல் கலாசாரம் மாறிவிட்டது. அங்கு நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டது. பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி உழைத்தார்கள். எனவே, இன்று இந்த இடத்தில் எந்தக் கட்சியையும் சாராதவர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். மே 09, 2022 அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி நான் மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை. நாட்டு மக்கள் ஒடுக்கப்பட்டதால், போராட்டங்கள் நடந்தன. இந்த பிரச்சாரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இறுதியில் நடந்தது பாரம்பரிய கட்சிகளால் நாட்டின் தலைமைக்கு வர முடியாத நிலை.

டிசம்பர் 2021 இல் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படக் கூடும் எனவும், அதனை உடனடியாகக் கையாளுமாறு ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

இதனை நான் முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன். உலக வங்கி பிரதிநிதிகள் வந்தபோதும் இதுபற்றி விவாதித்தோம். இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளை அழைத்தார். ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தன.

தமிழ் கூட்டணியின் ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மாத்திரமே இணைந்திருந்தேன். மற்ற எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.

அந்த நேரத்தில் நாட்டின் முன் ஒரு நெருக்கடி இருந்தது. அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்வது நம் அனைவரின் பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்பை யாராலும் தவிர்க்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் மாற்றுப் பிரதமர். அவர் பஸ் டிரைவர் இல்லை. எனவே, இதில் பங்கேற்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் பின்னர் மே 09ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அப்போது பொஹொட்டுவ அரசாங்க அதிகாரத்தை தக்கவைக்கும் நிலையில் இருக்கவில்லை. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். நாங்கள் பிரிட்டிஷ் முறையைப் பற்றி பேசுவதால், மாற்று பிரதமர் அதை எடுத்திருக்கலாம்.

மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்தால், மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நாங்கள் யாருக்கும் உதவுவோம் என்றேன். ஆனால், மே 10ம் திகதி வருமாறு தெரிவித்தும் அவர் வரவில்லை. பிரதமர் பதவியை ஏற்பதில்லை என முடிவு செய்திருந்தனர். அவர் தனது கடமையை நிறைவேற்றவில்லை.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாட்டை எவ்வாறு மீட்பது என்பது குறித்து சிலர் யோசனைகளை முன்வைத்தனர். ஆனால் அவர் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. மக்கள் விடுதலை முன்னணி முயற்சி கூட எடுக்கவில்லை. ஆனால் இந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அப்போது, ​​நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தலைவர் யார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த நேரத்தில் நான் நாட்டைக் காப்பாற்ற விரும்பினேன்.

அவ்வாறான சவால்களை நாம் அவ்வப்போது எதிர்கொண்டுள்ளோம். 1971 கிளர்ச்சியின் போது ஜே.ஆர். ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததோடு சிறிமாவோ பண்டாரநாயக்கவை ஆதரித்தார். அவரது மகனும் ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் நிலை மாறவில்லை. 1989 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் ரத்வத்த ஆகியோர் வந்து நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பார்கள் என்று பிரேமதாச ஜனாதிபதிக்கு அறிவித்தார். அப்போது இராணுவத் தளபதி அவர்கள் இருவரிடமும் இந்த வேலையைச் செய்வோம் பின்னர் எங்களைக் குறை கூறாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த வழியில், நாங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விவாதித்து வேலை செய்துள்ளோம்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோர் இணைந்து செயற்பட்டனர். மற்ற நேரங்களில் மோதல்கள் உள்ளன, ஆனால் அது ஒரு பிரச்சினை அல்ல. ஆசியாவிலேயே வெற்றி பெற்றவருக்கு அதிகாரம் வழங்கி தேர்தல் முடிவுகளின்படி வெளியேறும் ஒரே நாடு இலங்கை.

நீதித்துறை சுதந்திரம் பற்றி எவ்வளவோ பேசினாலும் இலங்கையில் தான் நீதித்துறை இயங்குகிறது. இந்திரா காந்தியின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத்தில் எழுந்த பிரச்சினைகளை நாம் அறிவோம்.

இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் போதே, ஜூலை 09ஆம் திகதி நடந்த சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. ஜூலை 9 அன்று, முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது, பிரதமார இருந்த எனக்கும் ​​பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

இராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுப்பது? நான் கடலுக்குச் சென்று ஜனாதிபதியைத் தேடவா? அப்போது நான் கூறினேன், நான் இராஜினாமா செய்வது என்றால் பெரும்பான்மை கொண்ட யாரும் முன்வாருங்கள் என்று.. எதிர்க்கட்சித் தலைவர் அதனையும் மறுத்தார்.

அங்குள்ள யாரையும் முன்வர அழைத்தேன். பின்னர் சபாநாயகரை பதவியேற்கச் சொன்னார்கள். பாராளுமன்றத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும், ஆனால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னால் ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் அரசியல் அமைப்பு சீர்குலைந்தது.

இறுதியாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்குள் இருந்தனர். இராணுவத் தளபதி அவர்களிடம் தெரிவித்தபோது, ​​பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது, ​​போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி வருவதாக இராணுவ தளபதிக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் 05 நிமிடங்களில் அனைவரும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர். பாராளுமன்றத்தைப் பாதுகாக்க இராணுவத் தளபதிக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து சபாநாயகரிடமும் தெரிவித்தேன்.

தேவைப்படும் நேரத்தில் பொறுப்பேற்காமல் கோஷங்களை எழுப்பினர். விவாதத்திற்கு வருமாறு பலமுறை தெரிவித்தும் ஒருவர் கூட வரவில்லை. அதன் பின்னர் இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவானது. நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவளித்தன. அவ்வாறே அனைத்து கட்சிகளும் எனக்கு எதிராகவும் வாக்களித்தன. பொஹொட்டுவ தலைவர் உள்ளிட்ட குழுவினர் எதிர்கட்சிக்கு சென்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பு எனக்கு வாக்களித்தது. நாங்கள் ஆட்சி அமைத்தோம். முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். அவற்றில் எதையும் நான் மாற்றப் போவதில்லை. சிலர் வெளியேறினர். அது வேறு விஷயம். ஆனால் நான் யாரையும் மாற்றப் போவதில்லை.

பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி நாட்டுக்காக உழைத்தனர். கட்சி பேதமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். வெளியில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. அன்றிலிருந்து இந்த அரசு அற்புதமான அரசாக முன் வந்தது. இன்று கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டு இந்த சாதனைகளை அடைந்துள்ளோம். இப்போது உலகம் எம்மை கடனை அடைக்கக்கூடிய நாடாக ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் கடனாளர் குழு, சீனா எக்சிம் வங்கி மற்றும் தனியார் கடப்பாடுகளுடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். நாங்கள் வெவ்வேறு வாக்குறுதிகளை வழங்க முடியாது. இனி பழைய அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை. என்பதை புரிந்து கொண்டோம். மேலும், நாடு முன்னேற வேண்டுமானால், நாட்டில் பொருளாதார மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். அங்கு, ஏற்றுமதியை நோக்கிய நவீன பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். 85 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2048-க்குள் 350 பில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும். சரியாக செயல்பட்டால் அந்த இலக்கை அடையலாம். சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகள் இன்று ஒரே நிலையில் இருந்து உழைத்ததால் வளர்ச்சி அடைந்துள்ளன. அரசியல் செய்யும் போது அடிப்படை ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாடுபட வேண்டும்.

பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இன்று பலர் இந்த சட்டத்தை உடைக்க விரும்புகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் கடந்த வாரமும் அதற்கு முன்னரும் நாம் எத்தனை வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டிருந்தாலும், இந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதே இதற்குக் காரணம். வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கட்சி பிடிக்கவில்லை என்றால் மற்றொரு கட்சிக்கு வாக்களியுங்கள். இந்த பொருளாதார கட்டமைப்பை உடைக்க முயன்றனர். ஆனால் மக்கள் எதிர்த்தனர். இப்போது நாடு பெற்ற வெற்றியை உறுதி செய்து, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதா அல்லது பழைய முறைப்படி தொடர்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இன்று இந்த நிகழ்வில் உங்கள் அனைவரின் வருகையும் பெரும் பலம் என்றே சொல்ல வேண்டும். ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம். பின்னர் 05 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்சி அரசியலில் ஈடுபடுகின்றோம்.

நாட்டிற்கு நிலையான பொருளாதார அமைப்பு தேவை. பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதற்கு நடுவில் ஒரு வலதுசாரியும், இடதுசாரியும் போட்டிக்குப் போகாமல் அந்த இடங்களில் மூன்றாமவரை நீக்குவோம் என்று முடிவு செய்தனர். எனது கட்சியில் இருந்து மூன்றாம் தரப்பு நீக்கப்பட்டதாக எனது கட்சி கூறினால், நீங்கள் உங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இப்போது இது வேறு பக்கம் திரும்பியுள்ளது. அதற்கேற்ப இணைந்து செயல்பட்டு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலையை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியை உறுதிப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னோக்கி செல்வோம். நாம் எப்போதும் பிச்சைக்காரர்களின் தேசமாக இருக்க முடியாது. பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைய முடியாது, வலுவான பொருளாதாரத்தில் நாட்டை உயர்த்த வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுமாறு அழைக்கிறோம். இன்று உங்களின் வருகைக்கு நாமும் நன்றி கூறுகிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...