சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன்போது, ஏற்றுமதியை நோக்கிய நவீன பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
85 பில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2048 ஆம் ஆண்டாகும்போது 350 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். சரியாக செயல்பட்டால் அந்த இலக்கை அடையலாம். சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகள் ஒரே நிலையில் இருந்து செயற்பட்டதால் இன்று முன்னேறியுள்ளன. அரசியல் செய்யும் போது அடிப்படை ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இன்று பலர் இந்தக் கட்டமைப்பை உடைக்க விரும்புகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் கடந்த வாரமும் அதற்கு முன்னரும் நாம் எத்தனை வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டோம். இந்த ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருப்பதே இதற்குக் காரணம்.
வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லை என்றால் மற்றொரு கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால் இந்த பொருளாதார கட்டமைப்பை உடைக்கவே அவர்கள் முயன்றனர். இப்போது நாடு பெற்ற வெற்றியை உறுதி செய்து, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதா அல்லது பழைய முறைப்படி தொடர்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இன்று இந்தச் சந்திப்பிற்கு நீங்கள் வருகை தந்தமை பாரிய பலம் என்றே கூற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம். 05 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்சி அரசியலில் ஈடுபடுவோம். நாட்டிற்கு நிலையான பொருளாதார முறைமை அவசியம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியை உறுதிப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னோக்கி செல்வோம். நாம் எப்போதும் பிச்சைக்கார நாடாக இருக்க முடியாது. பொருளாதார ரீதியில் கீழ் நோக்கிச் செல்ல முடியாது. வலுவான பொருளாதாரத்துடன் நாட்டை முன்னேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுமாறு அழைக்கிறோம். இன்று உங்களின் வருகைக்கு நாம் நன்றி கூறுகிறோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.