இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்தது போல், எதிர்காலத்திலும் பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் வளமான நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் பிரதான இலக்கு என வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நவீன யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆளுநர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் ஒரு கட்டமாக இந்த நாடு இனியும் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முன்னேறி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் உள்ள 33 உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த, தற்காலிக, மாற்றுத் திறனாளி முறைமையின் கீழ் பணிபுரிந்த எண்ணூறுக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (08) நாத்தாண்டிய நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றதுடன் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமேல் மாகாணத்தை தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்த மாகாணமாக அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தமது கடமைகளை திறம்பட செய்ய வேண்டுமென ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான அமல் சிந்தக மாயாதுன்ன, சமன்பிரியா ஹேரத், யதாமினி குணவர்தன, அலி சப்ரி ரஹீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சதுரங்க மேதிஸ்
தமிழில் – ஆர்.ரிஷ்மா