ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரையான காலப்பகுதியினுல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான சரியான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானிக்கும் என தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் கையொப்பமிடும் பணிகள் இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக நாளை (08) பரிசீலிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.