தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார்.
இதற்காக தொழில்நுட்பப் பொதி (பெக்கேஜ்) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது நெற்செய்கையின் வெற்றிகரமான பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளதுடன் 800,000 மெற்றிக் தொன் அரிசி அறுவடை கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நெல் விலை தொடர்பில் அமைச்சு என்ற வகையில் தலையிட முடியாது. ஆனால் திறந்த பொருளாதாரத்தில் விலை பராமரிப்பு நியாயமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. பொருட்களின் விலை உயர்வு ஓரிரு முறை நடந்தாலும், அரசு தலையிட முடியாது. தொடர்ந்து நடந்தால், தலையிட முடியும். தற்போது இரண்டு வகையான அரிசிகளின் கையிருப்பே பேணுப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து வகை அரிசிகளும் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும்.
மேலும், உலர் வலயத்தில் அதிக கவனம் செலுத்தி, விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில், பயன்படுத்தப்படாத வயல் நிலங்கள் ஏனைய பயிர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது உணவு உற்பத்தியில் சாதகமான முன்னேற்றமாக இருக்கும்.
தற்போது விவசாயத் துறையை உள்ளுர் எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஸ்ட்ரோபரி, மாம்பழம், அன்னாசி போன்ற பழப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.