வாய்ப் பேச்சு வீரர்களும் ஜோக்கர்களும் காப்பாற்ற முடியாது என்று கூறிய நாட்டை ரணில் விக்கரமசிங்க இரண்டு வருடங்களுக்குள் பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தார். துன்பப்பட்ட மக்களைக் குணப்படுத்த அவர் நிபந்தனையின்றி உழைத்தார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இ மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டொன்றுக்கு அனுப்பிய 220 மில்லியன் டொலர்கள் தற்போது சுமார் 700 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. அன்று 73% ஆக இருந்த பணவீக்கம் இன்று ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 4500/- ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டர் இன்று 2982/- ரூபாவாகவும், 660/- ரூபாயாக இருந்த பருப்பு கிலோ 360/- ரூபாவாகவும் குறைந்துள்ளது.
இது கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தின் இருப்பு நிலையை காட்டுகிறது. இன்று மக்கள் வரிசையில் இறப்பதில்லை. அன்று வங்குரோத்தடைந்த நாடாக இருந்தாலும், இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, மக்களின் காணி உரிமைக்கான காணி உறுதியை வழங்கி பாரிய சேவையாற்றி வருகின்றார்.
யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் ஒன்றுபட்டு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தனர். இலங்கையில் பொருளாதாரப் போருக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்களிடமிருந்து அத்தகைய ஆதரவு கிடைக்கும். கடந்த காலங்களில் மதத்தையோ நாட்டையோ காப்பாற்றுவதற்காகவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த முறை உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளவே தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தவறான முடிவை எடுத்தால், உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். எனவே பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டை மீண்டும் ஒப்படைப்போம்” என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.