விக்கிலீக்ஸ் (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ இரகசியங்களை வௌியிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்ச் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அங்கே அவர் அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்ச் கடந்த 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை நிறுவினார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ இரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டு இணங்கியது.
ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.