மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பது உட்பட அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்,யுவதிகள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் வருமாறு,
கேள்வி:நிரந்தர வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஏராளமானோர் இப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா?
பதில்:இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு தேர்தல் காலமாகும். எனவே, இவ்வருடம் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத போதிலும், அடுத்த சில வருடங்களில் பல புதிய வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.