ஆண்டுக்கு ஆண்டு, அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் அதிக பட்டதாரிகளை வெளியாக்கினாலும், அவர்கள் போட்டி மிக்க வேலைவாயப்புச் சந்தையில் உள்நுழைகிறார்களா என்பது இன்று ஓர் அடிப்படை பிரச்சினையாக மாறியுள்ளது. வேலைத் தேவைக்கு ஏற்ற கல்வித் தகுதி இன்மையும், அரச தொழிலே அவசியம் என்ற மனப்பான்மையும், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு இல்லாததுமே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனினும், இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தால், மதிப்புமிக்க இளம் மனித வளத்தை நாடு இழந்து வருகிறது. இது உண்மையில் மனித வளத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள மொத்த வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை, தற்போது அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் அதன் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு கொள்கைகளை கடிப்பிடிப்பதாலும், வெளிப்படைத் தன்மையின்மையாலும் பல பாரதூரமான பிரச்சினைகள் இன்று எழுந்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பல்கலைக்கழகங்களில் கல்வி சாரா தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிப் பரீட்சைகளையும் பாதிப்பதால் இதனை கையாள்வதற்கும், தீர்ப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.