வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் சொல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்லும் போது கண்டிப்பாக சிங்களம் தமிழ் இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவார்கள் இது எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் செய்யப்படவில்லை என ‘ஜெயகமு ஸ்ரீலங்கா – சிலாபம்’ புத்தளம் மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தினார்.
சிலாபம் ஷெர்லி கொரியா விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் சமூகம் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்…
“புத்தளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளம். உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புங்கள். எங்களிடம் இல்லாதது இலக்கும் உறுதியும்தான். இலவசக் கல்வி மூலம் கற்று பல்கலைக்கழகம் சென்று அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் பழக்கம் எமக்கு இல்லை. இன்னும் தற்கால உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கத் தயார்.
இன்று காலை சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. நீங்கள் அதை விசித்திரமாகக் காணலாம். பெரும்பாலும் யாழ்ப்பாணம், வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் செல்லும் போது தேசிய கீதம் தமிழில் பாடப்படும். இந்த மாகாணத்திலும் 30, 40 வீதமான மக்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் உங்கள் தேசத்தின் பெருமைக்காக உங்கள் சொந்த மொழியில் தேசிய கீதத்தை அடிக்கடி பாட முடியாமல் போனால் பிரச்சினை.நாம் வடக்கிற்கு ஒன்று தெற்கிற்கு ஒன்று என்றில்லை.. வடக்கோ தெற்கோ நாம் எங்கு சென்றாலும், அது தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக இருந்தால், தமிழ் பேசப்படும் பிரதேசமாக இருந்தால், தமிழிலும் தேசிய கீதத்தை பாடுவோம். ஏனென்றால் நாம் அனைவரையும் மதிக்க வேண்டும்..”