நாட்டின் இளைஞர்களுக்கு உயர் வருமான வழியை உருவாக்கத் தேவையான பொருளாதார செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
காலத்துக்கு ஏற்ப இளைஞர் படையணியும் மாற வேண்டும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க, நல்ல வருமான நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இளைஞர் படையை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் அதிக வருமானம் உள்ள தொழில்களை விரும்புகிறார்கள். எனவே, அந்த நிலையை உருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் பொருளாதார பரிமாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஊடாக 2027 ஆம் ஆண்டிற்குள் வேலையின்மையைக் குறைக்க முடியும். 2035 ஆம் ஆண்டிற்குள் அதிக வருமானம் தரும் பல தொழில் துறைகளை உருவாக்கலாம். 2048 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடொன்று உருவாகும்.
இன்று இங்கு இருக்கும் இளைஞர் படையணி மாணவர்களுக்கு அப்பொழுது 50 வயது கூட ஆகியிருக்காது. புதிய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வியட்நாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விரைவாக அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாத் துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கான அவசரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக இளைஞர் படையணி மாணவர்களை வழிநடத்த வேண்டிய தேவை உள்ளது. பசுமை சமுதாயம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் அறிவும் பயிற்சியும் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்க தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.