ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில் ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள், புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பொதுப் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
பிற்பகல் 2:00 மணிக்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் பேரணியில் கிட்டத்தட்ட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மக்கள் பேரணியை எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய பாரிய பரந்த கூட்டணியாக கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.