அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடென்ற ரீதியில் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளதாகவும், அதற்கு தொழிற்சங்க அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேசபந்து லெஸ்லி தேவேந்திரவின் தொழிற்சங்க பணிகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டத்திற்காக அனைத்து தொழிற்துறையினரதும் கருத்துக்களைப் பெறவும் கலந்துரையாடவும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான தொழிலாளியை உருவாக்குவதற்கும் “ஊழியர் மையம்” ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளது. அதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு தொகை பணத்தை ஒதுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான திட்டத்தினூடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் தொழிற்சங்க இயக்கங்களின் சார்பாக தேசபந்து லெஸ்லி தேவேந்திர ஆற்றிவரும் அளப்பரிய பணியைப் பாராட்டிய ஜனாதிபதி, அவர் சமூக யதார்த்தத்தை எப்போதும் உணர்ந்து நவீனமயமாக்கலுடன் முன்னோக்கிச் செல்ல பங்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்று நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து நாடென்ற வகையில் முன்னோக்கிப் பயணிக்கிறோம். நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இன்று சிங்களப் புத்தாண்டையும் வெசாக் பண்டிகையையும் எமது நாட்டு மக்கள் கொண்டாடிய விதத்தைப் பார்க்கும் போது ஒரு வகையில் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் எனக்கு அதில் திருப்தி கொள்ள முடியாது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2027 வரை கடனை செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பை நாங்கள் தற்பொழுது பெற்றுள்ளோம். ஆனால் வட்டியைச் செலுத்த வேண்டும். ஆனால் கடனை செலுத்தத் தேவையில்லை. 2042 வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளோம். இது குறித்து ஆராய்ந்து இறுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடன் சுமையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.
ஆனால், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தொடர்ந்து இருந்தால், மீண்டும் கடன் பெற வேண்டியிருக்கும். இவ்வாறே வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக்கொண்டிருந்தால், கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், தற்போது உள்நாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்வதைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளோம். உள்நாட்டு கடன் வரம்புக்குட்பட்டால், ஊழியர் சேமலாப வைப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய தொகையும் கட்டுப்படுத்தப்படும்.
ஏனைய அரச நிறுவனங்களுக்கு, அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சில புதிய சட்டங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நாட்டின் வளர்ச்சி குறித்து புதிதாக சிந்திக்க வேண்டும். பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்படாவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.
இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கும் துயரம் எனக்கு புரிகிறது. இந்த நாட்டில் 2019 இல் 15% ஆக இருந்த வறுமை நிலை இன்று 26% ஆக அதிகரித்துள்ளது. வருமான வழிகள் அற்ற கல்வி வசதி இல்லாத ஒரு பிரிவினர் உள்ளனர்.
அதன்படி, 2032ஆம் ஆண்டுக்குள் அதனை 10% ஆகக் குறைக்க இப்போது ஒப்புக்கொண்டுள்ளோம். இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வேலைத் திட்டத்தைத் தொடர வேண்டும்.
பொருளாதார ரீதியில் இப்போது நாம் எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளோம். நாம் நடக்க வேண்டும். இந்த ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வருடம் அதிக நிவாரணங்களை வழங்குவதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்க வுண்டும். இதற்காக அரச துறையின் அனைத்து துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.