காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் அவசரகால சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்வதற்கான முறையான செயல் திட்டங்களை தயாரித்தல், அனர்த்த மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் மாவட்ட குழுக்களை புதுப்பித்து செயல்படுத்தல் போன்ற விடயங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
‘சுரகிமு’ நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாட்டிலுள்ள 10126 பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கம் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் தென்னகோன் இதன்போது மேலும் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அடிப்படை முதலுதவி பயிற்சி அளிப்பதுடன், பாடசாலைகளில் முறையான முதலுதவி பெட்டிகள் கிடைப்பதை உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.