ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம் ஆகியோருக்கு பேரம் பேசித்திரிய முடியுமென்றால் ஏன் எமக்கு முடியது என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியிருந்தார்.
‘ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை நேற்று(27) உருவாக்கியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவிவிக்கையில்;
“.. ரிஷாத் பதியுதீன் ஒரு இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்டு பேரம் பேசி அதிகாரம் செய்கிறார். தொண்டமான் இரண்டு இலட்சம் வாக்குகளை வைத்துக் கொண்டு பேரம் பேசுகிறார். திகம்பரம் மூன்று இலட்ச வாக்குகளை வைத்துக் கொண்டு பேரம் பேசுகிறார். ரவூப் ஹகீம் நான்கு இலட்சம் வாக்குகளை வைத்துக் கொண்டு பேரம் பேசியே அதிகாரம் செய்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐந்து இலட்ச வாக்குகளை கொண்டு பேரம் பேசுகின்றனர்.
இந்நாட்டு தேசிய மட்டத்திலான எமக்கு எத்தனை இலட்சம் உள்ளது? அந்தளவுக்கு நாம் பலவீனமானவர்களா? அடுத்த ஜனாதிபதி பிரதமரை தெரிவு செய்வதும் அமைச்சரவை தெரிவு செய்வதும் நமக்கு தேவையான ஒருவரையே என்பதை அனைவரும் நினைவில் வைத்திருக்கட்டும்.
நாட்டுக்கும் இனத்திற்கும் அன்பான ஒருவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்டதொரு எம்பிக்கள் குழு எம்முடன் எதிர்காலத்தில் இணைய உள்ளனர். அதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்..” எனத் தெரிவித்தார்.
மவ்பிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, யுதுகம தேசிய அமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையிலான சுயேட்சை உறுப்பினர்களும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
குறித்த அரசியல் இயக்கத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.