அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான தனியார் முதலீடுகளுக்கு அரச நிறுவனங்களை வழங்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரியளவு கடனைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், விமான நிறுவனத்திற்கு வரும் முதலீட்டாளர் மீதி கடனைத் தாங்கும் அளவுக்கு வலிமையுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கொழும்பு ஹயட் ஹோட்டல், கிறிஷ் மற்றும் டெஸ்டினி திட்டங்களுக்கு பெறுமதியான அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த முதலீட்டாளர்கள் அந்த திட்டங்களை கைவிட்டுவிட்டனர். கிறிஷ் திட்டத்தில் பாழடைந்த கட்டிடத்துடன் சுற்றுச்சூழல் பிரச்சினை மாத்திரமே எஞ்சியுள்ளது.
அத்துடன் கொழும்பு ஹயட் ஹோட்டல் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அது இந்நாட்டு மக்களின் பணம் என்பதைக் கூற வேண்டும். இந்த ஹயட் ஹோட்டல் திட்டத்துடன் தொடர்புடைய மேலும் 35 மில்லியன் டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பு நகரில் உள்ள மிகவும் பெறுமதியான காணி இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடர பொருத்தமான முதலீட்டாளர் கிடைக்காவிட்டால், அரச திறைசேரியில் இருந்து செலவழித்து முப்படைகளின் பங்களிப்புடன் நிர்மாணப் பணிகளை முடிக்க எண்ணியுள்ளோம்.
மேலும் அடுத்த சில மாதங்களில் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் இந்நாட்டிற்கு வரும் என நம்புகிறோம். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டுள்ள நிலையில், இந்நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன், நிறுத்தப்பட்டிருந்த பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஏற்பட்ட பொருளாதார வலுவூட்டல் காரணமாக அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்திற்கு சமுர்த்தியை விட மூன்று மடங்கு தொகையை ஒதுக்கீடு செய்ய முடிந்துள்ளது.
அத்துடன் உரிமம் பெற்ற காணிகளுக்கு முழுமையான காணி உறுதிகளை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல பணிகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாம் நம்புகின்றோம்” என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.