எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரக்வானா தொகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு காலை உணவுக்காக எடுக்கப்பட்ட 100 பாண்களுக்கான பணம் இன்னும் வழங்கப்படவில்லை என ரக்வானவில் உள்ள பேக்கரி உரிமையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் ஒரு முன்னணி அரசியல் கட்சியின் செயல்பாட்டாளர்கள் பேக்கரிக்கு வந்து, மே முதலாம் திகதி ரக்வானவில் இருந்து நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு உணவுக்காக நூறு பாண்களை வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு அமைய பேக்கரி உரிமையாளர் வழங்கியுள்ளார்.
அதன்படி 100 பாண்களை குழுவினருக்கு வழங்கியதாகவும் பேரணிக்கு மறுநாள் மீதித் தொகையான பத்தாயிரம் ரூபாயைக் கேட்டும் இதுவரை பணத்தை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பின்னர், 100 பாண்களுக்கான ஆர்டர் கொடுத்த மூவரையும் தேடிப்பிடித்து பலமுறை பணம் கேட்டபோது, கட்சிக்காரர்களிடம் பணம் வசூலித்த பின் தருவதாக கூறியுள்ளனர்.
பேக்கரி உரிமையாளர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கட்சியின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பாண் ஆர்டரை டெலிவரி செய்யும் போது பேக்கரி உரிமையாளருக்கு முன்பணமாக ரூ.5000 கொடுத்தோம். மீதமுள்ள தொகையை வழங்குவதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் இரண்டு மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டதே தவிர நாம் ஏமாற்றவில்லை என்று தெரிவித்திருந்தார்.