வெளிநாட்டு ஊடகங்களின்படி, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) திட்டங்களால் இஸ்ரேலிய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
அவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி பட்டியலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹேக்’கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்” இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மிகக் கடுமையான குற்றங்களுக்காக சர்வதேச சட்டத்தின் கீழ் தனிநபர்களை குற்றஞ்சாட்டவும் விசாரணை செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் லிபிய தலைவர் முயம்மர் கடாபி, உகண்டா இராணுவத் தலைவர் ஜோசப் கோனி ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.
இந்த திட்டம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம் தனது நாட்டை பாதுகாக்கும் முயற்சியை குலைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.