துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
இஸ்தான்புல்லில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரேம் இமாமோக்லு முன்னிலை பெற்றுள்ளார். மான்சுர் யவாஸ் அங்காராவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 81 மாகாணங்களில் 36-ல் குடியரசு மக்கள் கட்சி (சி.ஹெச்.பி.) முன்னிலை வகிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சிகளிடம் இழந்த நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை மீட்டெடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்றார் எர்டோகன். ஆனால், எர்டோகனுக்கு மீண்டும் தோல்வி கிடைத்துள்ளது.
70 வயதான எர்டோகன் கடந்த 1994-ல் இஸ்தான்புல் மேயர் பதவியில் வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரது அரசியல் வாழ்க்கை அதிபர் வரை உயர்ந்துள்ளது.
“துருக்கியில் ஒரு புதிய அரசியலை ஏற்படுத்த வாக்காளர்கள் முடிவு செய்தனர். இன்று (நேற்று) வாக்காளர்கள் துருக்கியின் 22 வருட பிம்பத்தை மாற்ற முடிவு செய்துவிட்டார்கள். நம்முடைய நாட்டில் புதிய அரசியல் சூழ்நிலைக்கான கதவு திறந்து விட்டது” என சிஹெச்பி தலைவர் ஓஸ்குர் ஓசேல் தெரிவித்துள்ளார்.