follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP2ISIS அமைப்பில் சேர்ந்த 4 சகோதரிகளை மீட்க முயன்ற தாயின் கதை

ISIS அமைப்பில் சேர்ந்த 4 சகோதரிகளை மீட்க முயன்ற தாயின் கதை

Published on

‘ஃபோர் டாடர்ஸ்’ (Four daughters) என்ற ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ள புகைப்படங்களில் ரஹ்மா மற்றும் கோஃப்ரேன் சிகாவ்யி மிகவும் இளமையாகத் தோன்றுகின்றனர்.

கறுப்பு நிற ஹிஜாப்களால் மூடப்பட்டு, அவர்களின் டீன் ஏஜ் முகங்கள் மட்டுமே அதில் தெரிகிறது. பல மேற்கத்திய அரசுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்ட இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்ஐஎஸ்) இயக்கத்தில் இணைந்தபோது அவர்களுக்கு வயது வெறும் 15 மற்றும் 16 வயது.

ஓநாய்களின் பிடியில் சிக்கிய ஆடுகளைப் போல் இந்த பெண்களின் நிலை உள்ளது எனக் கூறுகிறார் ஆவணப்படத்தின் இயக்குநர் கவுதர் பென் ஹனியா. ‘ஃபோர் டாடர்ஸ்’ ஆவணப்படத்திற்காக இரண்டாவது முறையாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இயக்குநர் பென் ஹனியா.

கடந்த 2021ஆம் ஆண்டில், ‘தி மேன் ஹூ சோல்ட் ஹிஸ் ஸ்கின்’ (The Man Who Sold His Skin) என்ற திரைப்படத்திற்காக சர்வதேச திரைப்படப் பிரிவில் முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கு கவுதர் பென் ஹனியா பரிந்துரைக்கப்பட்டார். ஷெங்கன் விசாவுக்காக தனது முதுகுத் தோலை ஒரு ஓவியக் கலைஞருக்கு விற்கும் ஒரு சிரிய அகதியைப் பற்றிய திரைப்படம் அது.

‘ஃபோர் டாடர்ஸ்’ ஆவணப்படத்தில், 4 பெண்களின் தாய் ஓல்ஃபா மற்றும் அவரது மகள்கள் ஈயா, டெய்சிர், கோஃப்ரேன் மற்றும் ரஹ்மா ஆகியோரின் கதை விவரிக்கப்படுகிறது. இந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரிகள் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தில் சேர எந்தெந்த நிகழ்வுகள் காரணமாக இருந்தன என்ற நோக்கில் கதை சொல்லப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாக பெண்களுக்கு நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை துனிசிய வரலாற்றுடன் இணைத்து இந்தக் கதை சொல்கிறது.

ஃபோர் டாடர்ஸ்’ ஆவணப்படத்தில், 4 பெண்களின் தாய் ஓல்ஃபா மற்றும் அவரது மகள்கள் ஈயா, டெய்சிர், கோஃப்ரேன் மற்றும் ரஹ்மா ஆகியோரின் கதை விவரிக்கப்படுகிறது. இந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரிகள் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தில் சேர எந்தெந்த நிகழ்வுகள் காரணமாக இருந்தன என்ற நோக்கில் கதை சொல்லப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாக பெண்களுக்கு நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை துனிசிய வரலாற்றுடன் இணைத்து இந்தக் கதை சொல்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பெண்கள்

இஸ்லாமிய அரசு அமைப்பில் பெண்கள்
இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பில் இணைந்த பிறகு ஷமிமா பேகம் தனது பிரிட்டிஷ் குடியுரிமையை இழந்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்பில் சேர ஓர் இளம் பெண்ணை எது தூண்டுகிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார் இயக்குநர் கவுதர் பென் ஹனியா.

“ஆண்கள் இவ்வாறு இணைவதைப் பார்த்து நாங்கள் பழகிவிட்டோம், ஆனால் பெண்களும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது மிகவும் புதியது. இளம் பெண்கள் ஏன் இதில் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“நான் கண்டுபிடித்த மிகவும் முரண்பட்ட கருத்துகளில் ஒன்று, கோஃப்ரேனும் ரஹ்மாவும் சுதந்திரம் அடைய விரும்பினார்கள். தங்கள் தாயின் அடக்குமுறையில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் தாய் மற்றும் தந்தையிடம் தங்களது தகுதியை நிரூபிக்க விரும்பினர். சுதந்திரத்திற்கான ஆசையில் அவர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது,” என்கிறார்.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோது, அந்த அமைப்பில் சேர தப்பியோடிய சிகாவ்யி சகோதரிகள் போன்ற பல இளம் பெண்களின் புகைப்படங்கள் அதில் உள்ளன.

கடந்த 2013 மற்றும் 2018க்கு இடையில் இராக் மற்றும் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அமைப்பின் செயல்பாடுகளுடன் 4,761 வெளிநாட்டினருக்கு தொடர்பு இருப்பதாக லண்டன் கிங்ஸ் கல்லூரியின் 2018 அறிக்கை கூறுகிறது.

பென் ஹனியாவை போலவே, ஊடகங்களும் ‘பெண் பயங்கரவாதிகள்’ என்பதில் ஆர்வமாக உள்ளன. அத்தகைய குழுக்களில் சேர்பவர்கள் ஆண்களைப் போலவே கடுமையாக நடத்தப்படலாம். லண்டனை சேர்ந்த ஷமிமா பேகம் என்ற இளம்பெண் 15 வயதில் இஸ்லாமிய அரசு அமைப்பில் சேர்ந்தார். இதனால் சமீபத்தில் அவரது பிரிட்டிஷ் குடியுரிமை பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இந்த அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.

“இதுகுறித்து தலைப்புச் செய்திகள் வெளியாகின” என்று பென் ஹனியா கூறினார். “ஆனால் தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால் என்ன உண்மை இருக்கிறது எனக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும். அதை சொல்லத்தான் சினிமா இருக்கிறது.”

பெண்கள் இத்தகைய முடிவை எடுப்பது ஏன்?

‘ஃபோர் டாடர்ஸ்’ ஆவணப்படம் குறித்த மறக்க முடியாத அம்சம் என்னவென்றால், சிகாவ்யி சகோதரிகள் ஏன் இந்த முடிவுகளை எடுத்தார்கள் என்பதன் மூலத்தை பென் ஹனியா கண்டறிந்த விதம்.

தாய் மற்றும் இரண்டு இளைய மகள்களைத் தனது படத்தில் பங்கேற்க அழைத்ததுடன், இரண்டு நடிகைகளான இச்ராக் மாதர் மற்றும் நூர் கரூயி ஆகியோரை கோஃப்ரேன் மற்றும் ரஹ்மா வேடங்களில் நடிக்கச் செய்துள்ளார். அதே நேரத்தில் துனிசிய-எகிப்திய நட்சத்திரமான ஹென்ட் சப்ரி ஓல்ஃபாவாக நடித்துள்ளார்.

ஆஸ்கார் விருதுக்கு 2012ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஜோசுவா ஓப்பன்ஹைமர் எழுதிய தி ஆக்ட் ஆஃப் கில்லிங் போன்ற ஆவணப்படம் இது இல்லை என்று பென் ஹனியா கூறுகிறார். இந்தோனீசியாவின் போர்க் குற்றங்கள் பற்றிப் பேசிய அந்த ஆவணப்படத்தில், முன்னாள் ராணுவ தலைவர்கள் அவர்களது சொந்த கதாபாத்திரத்தில் நடித்தனர்.

“நடிகர்கள் இருந்தாலும், அவர்களது பாத்திரங்கள் படத்தில் மிகவும் சிறியவை. தாய் ஓல்ஃபா மற்றும் அவரது இரண்டு மகள்கள் குறித்த தங்கள் எண்ணங்களையும் சந்தேகங்களையும் பகிர்ந்துகொண்டு, சாதாரண மனிதர்களாக இதில் நடிக்கிறார்கள்,” என்று பென் ஹனியா விளக்கினார்.

“ஒருவேளை நாம் இதை ‘ மெட்டா-ஆவணப்படம் ‘ என்று அழைக்கலாம், ஏனெனில் இது உண்மையான நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் படத்தைப் பற்றிய ஒரு படம்.”

“நான் ஒரு ரகசிய கேமரா மூலம் ஆவணப்படத்தைப் படமாக்கத் தொடங்கினேன், ஆனால் அது சுவாரஸ்யமானது அல்ல என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். இந்தக் கதையில் ஆழமாகச் செல்ல வேண்டும். எனவே நான் சினிமாவில் இருந்து சில யுக்திகளை கடன் வாங்கினேன். இந்தக் கதையை சுவாரஸ்யமான வழியில் சொல்ல சிறந்த மற்றும் ஒரே வழி அதுதான்,” என்று அவர் விளக்கினார்.

“ஓல்ஃபா மற்றும் இரண்டு இளைய மகள்களைச் சந்திக்க நடிகர்களை அழைத்து வந்தேன். அதன் மூலம் நடிகர்களை இயக்கவும், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தாய், மகள்களின் நினைவுகளை தெளிவாக வெளிப்படுத்தவும் முடியும்” என்று இயக்குநர் கூறினார்.

“இது நடிகருக்கும் உண்மையான கதாபாத்திரத்திற்கும் இடையிலான ஓர் உரையாடல். இது தாயிடமிருந்து மகளுக்குப் பரப்பப்பட்ட வன்முறை குறித்த கதை, அதை அந்த தாய் ‘சாபம்’ என்று அழைக்கிறார்,” என்கிறார் இயக்குநர்.

பல தலைமுறைகளாக தொடரும் சாபம்

இஸ்லாமிய அரசு அமைப்பில் பெண்கள்
சிறுமிகளின் தாய் ஓல்ஃபா ஹம்ரூனியும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.

படத்தில் இருந்து வெளிப்படுவது என்னவென்றால், ஓல்ஃபா ஹம்ரூனி இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார். ஒரு இளம்பெண்ணாக பாலியல் வன்முறையிலிருந்து தன்னையும் மகள்களையும் பாதுகாக்க முயன்றதை அவர் நினைத்துப் பார்க்கிறார். அதே போல அவரது தாய்க்கும் இத்தகைய கொடுமைகள் நடந்துள்ளது.

ஓல்ஃபா தனது மகள்களை தனியாளாக கட்டுப்பாடோடு வளர்த்தார், அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தார். திரைப்படங்களில் காட்டப்படுகின்ற ‘வேசிகள்’ என்பவர்களைப் போல் அவர்கள் மாறிவிடக்கூடாது என்று பயந்தார். உதாரணமாக, மகள் கோஃப்ரேன் தனது தலைமுடிக்கு சாயம் பூசியபோது, கால்களின் ரோமத்தை நீக்கியபோதும் அவரை அடித்ததை ஓல்ஃபா நினைவு கூர்ந்தார்.

படத்தின் முடிவில் திரைப்பட இயக்குநரிடம், “தன் குட்டிகளின் பாதுகாப்பு குறித்து பயந்து பயந்து, வேறு வழியின்றி அவற்றை உண்ணும் பூனையைப் போல நான் மாறிவிட்டேன். நான் அவர்களைப் பற்றி மிகவும் பயந்தேன், என்னால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. நான் எனது மகள்களை இழந்துவிட்டேன்,” என்று கூறுகிறார் தாய் ஓல்ஃபா.

“ஓல்ஃபா இந்த தலைமுறை சுழற்சியை ‘சாபம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது இளம்வயதில் தான் அனுபவித்த துயரத்தைத் தனது மகள்களுக்கும் கடத்துவது,” என்று விளக்குகிறார் இயக்குநர் பென் ஹனியா.

“படத்தின் கதையோட்டத்தில் தனக்கு என்ன நடக்கிறது என்பதையும், இந்த துன்பியல் மரபு தனது மகள்களையும் எவ்வாறு பாதித்தது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். நல்ல விஷயம் என்னவென்றால், ஒரு கட்டத்தில் நடிகர்கள் அவரிடம் சொல்கிறார்கள்: ‘நாங்கள் அனைவரும் இதைச் செய்கிறோம். தாயிடமிருந்து பெற்ற துயரத்தை நம் மகள்களுக்குக் கொடுத்துவிட்டு, கடைசியில் ‘இந்த துயரம் போதும் இனி இது எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் இளைய தலைமுறையை வளர்க்கிறோம்., இதுதான் படத்தின் வெற்றி என்கிறார் பென் ஹனியா.

“ஓல்ஃபாவின் மூத்த மகள்கள் தாயின் கட்டுப்பாட்டிற்கு மிகவும் வன்முறையான எதிர்வினையைக் கொண்டிருந்தனர் மற்றும் இந்த துன்பியல் சுழற்சியை இனியும் அனுபவிக்க முடியாது என்று சொன்னார்கள். அதனால் அடுத்த இரண்டு தங்கைகள் காப்பாற்றப்படுவார்கள். அந்த தங்கைகள் தான் இந்தப் படத்தின் நம்பிக்கை,’’ என்கிறார் பென் ஹனியா.

அம்மா மீதான அதிகாரம்

இஸ்லாமிய அரசு அமைப்பில் பெண்கள்
சமீபத்திய ஸ்பிரிட் விருதுகளில் சிறந்த ஆவணப்படப் பிரிவில் இயக்குநர் கவுதர் பென் ஹனியா விருதைப் பெற்றார்.

தங்கள் தாயின் வற்புறுத்தலால்தான் கோஃப்ரேனும் ரஹ்மாவும் முதலில் ஹிஜாப் அணியவும், பின்னர் கண்களை மட்டுமே வெளிப்படுத்தும் முக்காடு போன்ற ஒன்றை அணியவும் தொடங்கினார்கள். 2011 துனிசிய புரட்சிக்கு முன் பொது இடங்களில் அரிதாகவே அத்தகைய உடை அணியப்பட்டது.

இருப்பினும், தீவிரமயமாக்கல் (ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்பில் சேர்வது) என்பது தாய் ஓல்ஃபாவின் மீது அந்த இளம் பெண்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாக மாறியது.

“தீவிரமயமாக்கல் அவர்களுக்கு, தங்கள் தாயின் மீதான அதிகாரத்தை வழங்கியது. பெண்களின் பாலியல் அடையாளம் குறித்து பாடம் எடுப்பவர்களுக்கு அவர்களால் பதிலடி கொடுக்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.

“இந்தக் கதையின் முரண்பாடான விஷயம் என்னவென்றால், ஆணாதிக்கத்தின் பாதுகாவலராக இருப்பது மஜ்த் மஸ்தூராக நடித்தவர் அல்ல, மாறாக இங்கு ஆணாதிக்கத்தின் பாதுகாவலராக இருப்பது தாய் ஓல்ஃபா. அவர்தான் தனது மகள்களுக்கு அழுத்தம் கொடுத்தவர்,” என்று திரைப்பட இயக்குநர் கூறுகிறார்.

மேலும், “அவரது மகள்கள் அழகான பெண்களாக இருந்ததால், திரைப்படத்தில் சொல்வது போல் அவர்கள் மோசமான பெண்களாக அல்லது ‘வேசிகளாக’ மாற மாட்டார்கள் என்று மறுக்க வேண்டியிருந்தது. ஒரு பெண்ணாக இருப்பதற்காக மட்டுமே இந்த நிரந்தர குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்படும்போது அதிலிருந்து ​​​​உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்,” என்கிறார் இயக்குநர்.

‘அரக்கர்களின் காலம்’

இஸ்லாமிய அரசு அமைப்பில் பெண்கள்
இடமிருந்து வலமாக: டெய்சிர் சிகாவ்ய், இஷ்ராக் மாதர், நூர் கரூய் மற்றும் ஈயா சிகாவ்ய்.

கோஃப்ரேன் மற்றும் ரஹ்மா ஆகியோருக்கு இளமைப் பருவம்தான் தீவிரமயமாதலுக்கான சரியான காலகட்டமாக இருந்தது என்று பென் ஹனியா எச்சரிக்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டின் துனிசியப் புரட்சியின் உறுதியற்ற தன்மை மற்றும் ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்குப் பிறகு, பல துனிசியர்கள் லிபியா, இராக் மற்றும் சிரியாவில் குழுவில் சேரும் யோசனையால் ஈர்க்கப்பட்டனர். 2015இல் 6,000 துனிசியர்கள் இந்த அமைப்பில் இணைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“இத்தாலிய தத்துவஞானி அன்டோனியோ கிராம்சியின் மேற்கோளைப் பற்றி நான் நினைக்கிறேன்: ‘பழைய உலகம் இறந்து கொண்டிருக்கிறது, புதிய உலகம் பிறக்கப் போராடுகிறது. இது அரக்கர்களின் காலம்” என்று திரைப்பட இயக்குநர் கூறுகிறார்.

“நான் இரண்டு உலகங்களுக்கு இடையே இருக்கும் ஐரோப்பா பற்றிப் பேசுகிறேன், ஆனால் நீங்கள் அரபு வசந்தம் (சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்) மற்றும் ஐஎஸ் அமைப்பின் எழுச்சி பற்றிக் கூறலாம். அந்தி நேரத்தில், அரக்கர்கள் தோன்றும் காலம் இது,” என்று அவர் விளக்கினார்.

“புரட்சியும் அரபு வசந்தமும் பிராந்தியத்தின் சர்வாதிகாரத்தை உலுக்கியது. ஆனால் புதிய உலகம், இந்த புரட்சியின் பலனாக, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் இன்னும் கிடைக்கல்லை. எனவே, புதிய உலகம் வர சிறிது நேரம் எடுக்கிறது, அதுவரை ​​இந்த அரக்கர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓல்ஃபாவின் மகள்கள் அந்த அரக்கர்களின் இடத்தில் இருக்கின்றனர்,” என்று கூறுகிறார் இயக்குநர் பென் ஹனியா.

கடந்த 2015இல் கோஃப்ரேன் மற்றும் ரஹ்மா சிகாவ்யி ஆகிய இருவரும் துனிசியாவில் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக தகவலைகள் வெளிவந்தபோது, அவர்களது பெயர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

துனிசிய தொலைக்காட்சியில் தோன்றிய ஓல்ஃபா, தனது மகள்கள் தீவிரமயமாதல் பாதையை நோக்கிச் செல்வதாக அதிகாரிகளை தான் எச்சரித்ததாகவும், ரஹ்மா தப்பியோடுவதைத் தடுக்க அவளைக் கைது செய்ய வலியுறுத்தியதாகவும் சொன்னார்.

பின்னர் இரு இளம் பெண்களும் லிபியாவில் பிடிபட்டனர் மற்றும் 2023இல் அவர்களுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோஃப்ரேனின் எட்டு வயது மகள் ஃபாத்மா லிபிய சிறையில் தன் தாயுடன் வளர்கிறாள்.

வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும்கூட தனது ஆவணப்படம் துனிசியாவின் திரையரங்குகளில் இன்றும் ஓடுகிறது என்கிறார் இயக்குநர் பென் ஹனியா.

சகோதரிகளை துனிசியாவிற்கு அழைத்து வந்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை. சிறையில் இருந்து ஃபாத்மாவை விடுவிப்பதற்கான திட்டங்களும் இதுவரை வெற்றிபெறவில்லை.

இளைய தங்கை ஈயா சிகாவ்யிடம், உங்கள் சகோதரிகளை நீங்கள் மீண்டும் பார்க்க முடிந்தால் அவர்களிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இந்தக் குடும்பம் உங்களை அழித்தது, என்னை அழிக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறுவேன் என்றார். அதுவே இந்த ஆவணப்படத்தின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம்.

(நன்றி – பிபிசி)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா,...

பெங்கல் புயல் – சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம்

பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால்...