மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கியுள்ள ஹெலிகாப்டர்கள் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து மாலைத்தீவு இராணுவம் சில கருத்துகளைக் கூறி இருக்கிறது.
மாலைத்தீவில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு அதிபராகத் தேர்வானது முதல் அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறி வருகிறார்.
அந்த ஹெலிகாப்டர்களை செயல்படுத்தவும் அதைப் பராமரிக்கவும் இந்திய வீரர்கள் மாலைத்தீவில் இருக்கிறார். அதன்படி சுமார் 88 இந்திய இராணுவத்தினர் அங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மாலைத்தீவு நாட்டில் உள்ள இந்தியா ஹெலிகாப்டர் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது.
அதாவது இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை இயக்கும் அதிகாரம் தங்கள் நாட்டிற்கே இருப்பதாக மாலைத்தீவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் கர்னல் அகமது முஜுதாபா முகமது, “மாலைத்தீவில் இருந்து இந்தியப் படைகளை முழுமையாகத் திருப்பி அனுப்புவது குறித்துத் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
மே 10ஆம் திகதிக்கு பிறகு எந்த வெளிநாட்டுப் படைகளும் இங்கே இருப்பதை அனுமதிக்கப் போவதில்லை. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் நிலைப்பாடு இதுதான். எனவே, அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மாலைத்தீவு சீனா இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இத்திட்டத்தின்படி சீனா மாலைத்தீவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாத ஆயுதங்களை இலவசமாக வழங்கும். குறிப்பாகக் கண்ணீர்ப்புகை மற்றும் பெப்பர் ஸ்ரே ஆகியவற்றை இலவசமாக வழங்குவதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் அனைத்து இந்திய இராணுவத்தையும் வெளியேற்றப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.