அரசாங்கத்தால் வெட் வரி முறையாக வசூலிக்கப்படுவதில்லை என்பதை அவதானித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய்ப் பிரிவு பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, பெறுமதி சேர் வரியை முறையாக வசூலித்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பொருளாதாரத்தில் சேர்க்க முடியும். ஆனால் தற்போது, 2% சதவீதமான வரியே பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்ததில் மூன்று முக்கிய வரி குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்கள் வரி வசூல் செய்கிற போதும் அதை அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை. இரண்டாவது குறைபாடு, அதிகாரிகளின் முறைகேடு களால் வரி வருமானம் இழக்கப்படுகிறது. வரி விலக்குகள் மூலமாகவும் வரி தொடர்பான குறைபாடுகள் ஏற்படுகிறன. இந்த வரி தொடர்பான ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் ஊடாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2019 முதல் ஆறு மாத காலத்தில், வெட் வரி 15% ஆக இருந்தது. 2020இல் இது 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதே விகிதத்தில் இருந்தது. வெட் வரி 8% குறைக்கப்பட்டதால் 2020 இல் பொருட்களின் விலை குறையவில்லை. இந்த மூன்றாண்டுகளில் சரிந்த பொருளாதாரத்தை 15% வீதமாக வெட் வரியை வைத்துக்கொண்டு உயர்த்த முடியாது. எனவே, பொருளாதாரத்தை உயர்த்த வெட் வரியை 18% ஆக உயர்த்த வேண்டும்.
தற்போது வெட் வரி வசூலுக்காக பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் பதின்மூன்றாயிரம் ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை ஐம்பதாயிரமாக உயர்த்துவது அரசின் எதிர்பார்ப்பாக உள்ளதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய்ப் பிரிவு பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார்.