புத்தளத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டமைப்பாக செல்வதற்கான முயற்சிகளை புத்தளம் பெரிய பள்ளி, ஜமிய்யதுல் உலமா மற்றும் புத்திஜீவிகள் குழு இணைந்து முன்னெடுத்துச் சென்றது..
இந்த முன்னுதாரணமான, சமூகத்தின் எதிர்காலத்தை முதன்மை படுத்தி, தன்னலம் பாராமல் இரவு பகலாக தங்களது நேரங்களை தியாகம் செய்த எமது இந்த புத்தளத்தின் முத்துக்களை நாம் என்றும் நன்றி மறக்க மாட்டோம். அவர்களின் இந்த நன்முயற்சிக்கான பலன்களை நிச்சயமாக இறைவன் வழங்குவான். எந்தவொரு நல்ல முயற்சியும் வீணாகுவதில்லை; இந்த முயற்சிக்கான பெறுபேரை இறைவன் ஏதோ ஒரு வகையில் வெற்றியாக வழங்குவான்.
இந்தமுறை பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக இறுதி முடிவெடுக்கும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (06-10-2024) கௌரவ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் புத்தளம் தில்லையடி வீட்டில் இடம்பெற்றது. இதில் கௌரவ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் வட்டார அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
மூன்று மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் இறுதி முடிவின் அடிப்படையில், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் (புத்தளம் பெரிய பள்ளி ஜமிய்யதுல் உலமா மற்றும் புத்திஜீவிகள் குழு) அழைக்கப்பட்டு, அவர்களிடம் எமது இறுதி நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
தீர்மானம்:
இந்த கூட்டமைப்பின் முயற்சி, புத்தளத்துக்கான ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதற்கான பயணமாகும். எமது சிறுபாண்மை வாக்குகள் பிரிந்து விடாது ஒற்றுமையாக ஒரே சின்னத்தில் செல்வதாகும்.
ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு, எமது சிறுபான்மை சமூகம் இனவாத பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராக ஒரே சின்னத்தில் வாக்களித்தது போல, இம்முறை அப்படியொன்று நடக்கக்கூடிய சாத்தியம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
சிறுபான்மை வாக்குகளின் நிலைமை மற்றும் எதிர்கால சிக்கல்கள்:
- NPP அலையில்: எமது சிறுபான்மை வாக்குகள் கணிசமான அளவில் NPP (தேசிய மக்கள் சக்தி) க்கு செல்கின்றன.
- SJB யின் நிலைமை: SJB (ஐக்கிய மக்கள் சக்தி) க்கு, கடந்த காலங்களை போன்று நிரந்தரமான சிறுபான்மை வாக்குகள் உண்டு. இம்முறை அவர்களுக்கும் அந்த வாக்குகள் வழமைபோல சென்று விடும்.
இதனால் என்ன நடக்கும்?
எமக்கு கிடைக்கும் வாக்குகள், கடந்த முறைப்போல அதிகம் இருக்காது. அதற்கு மேலாக, NPP, SJB மற்றும் UNP (Gas Cylinder) போன்ற கட்சிகளுக்கு பாராளுமன்ற ஆசனங்கள் கிடைத்த பின்னரே எமது கூட்டமைப்புக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. அல்லது எமது முயற்சிகள் வீணாகிவிடுமா என்ற நிலையுள்ளது.
தோல்வியின் சாத்தியம்:
கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லையெனில், நாம் மீண்டும் தோல்வியுற்ற சமூகமாக மாறிவிடுவோம். இந்த தோல்வி எமது சமூகத்திற்கு மிகுந்த பின்னடைவாக இருக்கும்.
அலி சப்ரி தொடர்பான பிரச்சினை:
மேலும், அலி சப்ரி அவர்களும் இந்த கூட்டமைப்பில் உள்ளார். அவர் ஒரு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு தண்டப்பணம் செலுத்தியுள்ள காரணத்தால், எமது கூட்டமைப்பு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம்.
அப்படி நடந்தால்:
இந்த கூட்டமைப்பை தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துவிட்டால், கூட்டமைப்பை நம்பி ஒன்று சேர்ந்த அனைவரின் நிலைமையும் கவலைக்கிடமாகிவிடும். நாம் ஆரம்பத்திலேயே தோல்வியடையும் நிலை ஏற்படும். இப்பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, நாம் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறாயின் எமக்கு இருக்கும் உறுதியான சந்தர்ப்பங்கள் என்ன? நாம் வென்றாலும், தோற்றாலும் எமக்கான ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
தெரிவு 01:
புத்தளம் மாவட்டத்தின் இறுதியாக இடம்பெற்ற தேர்தல் நிலைமைக்கு அடிப்படையாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் SJB (ஐக்கிய மக்கள் சக்தி) க்கு கிடைத்த வாக்குகளைப் பார்க்கலாம்:
புத்தளம் – 68,000 வாக்குகள்
சிலாபம் – 29,000 வாக்குகள்
வென்னப்புவ – 20,000 வாக்குகள்
நாத்தாண்டிய – 18,000 வாக்குகள்
ஆனமடுவ – 33,000 வாக்குகள்
இந்த எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது, பெரும்பான்மை sசமூகத்தை சேர்ந்த, முதன்மை வேட்பாளரை தவிர வேறு ஒருவரும் 30,000க்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெறுவது மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால், சிறுபான்மைக்கு கிடைக்கும் விருப்பு வாக்குகள் அதிகமாகவே இருக்கும். எனவே, எமது சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும்.
SJB யின் உறுதிமொழி:
இவ்வாறான சூழலில், SJB யில் எமது சிறுபான்மை உறுப்பினர் தோல்வியடைந்தாலும், அதிகமான வாக்குகளைப் பெற்ற எமது சிறுபான்மை வேட்பாளருக்கு விசேடமாக தேசிய பட்டியலிலிருந்து ஒரு உறுப்பினரை வழங்குவதாக SJB தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் உறுதியளித்துள்ளார். இதனை அவர் எழுத்துமூலமாக வழங்கவும் தயாராக உள்ளார்.
வெற்றி அல்லது தோல்வி:
இது பொருத்தமாக, நாம் வென்றாலும் அல்லது தோற்றாலும், எமக்கு ஒரு உறுதியான பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கப்பெறுவார்.
தெரிவு 02:
SLMC (மரம் சின்னம்) மற்றும் ACMC (மைல் சின்னம்) ஆகிய கட்சிகளில் இணைந்து போட்டியிடும் சூழலில், நாம் தோல்வியடைந்தாலும், இந்த இரு கட்சிகளின் தனித்துச்செல்லும் பிற மாவட்டங்களின் வாக்குகளுடன் எமது வாக்குகளையும் சேர்த்து, தேசிய பட்டியலிலிருந்து ஒரு உறுப்பினரை பெறும் வாய்ப்பு அதிகமாகும். ஆனால், SLMC எந்தவொரு மாவட்டத்திலும் தனித்து போட்டியிடாததால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
ACMC (மைல் சின்னத்தில்) கூட்டிணைந்தாள்:
எனவே, நாம் அனைவரும் ACMC (மைல் சின்னத்தில்) கூட்டாக இணைந்து சென்றால், ACMC தனித்து போட்டியிடும் அம்பாறை மாவட்டத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலில் இருந்து ஒரு உறுப்பினரை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும்.
உறுதிமொழி:
கௌரவ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் உறுதியளித்ததன்படி, நாம் தோல்வியுற்றால்கூட, இந்த தேசிய பட்டியலிலிருந்து கிடைக்கும் உறுப்பினரை புத்தளத்திற்கு வழங்குவார். மேலும், அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற முதல் மூன்று உறுப்பினர்களுள்,
முதலாமவர் 2 வருடங்களும்,
இரண்டாமவர் மற்றும் மூன்றாமவர்கள் தலா 1½ வருடங்கள் வீதம்,
மொத்தம் 5 வருடங்களையும் புத்தளத்துக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
நிச்சயம் ஒரு உறுப்பினர்:
எனவே, நாம் வென்றாலும் தோற்றாலும், எமக்கு ஒரு உறுதியான உறுப்பினர் கிடைக்கப்பெறும்.
எனவே எமது திட்டமிடல்களை மிகக் கவனமாக ஆய்வு செய்து, சரியான முடிவுகள் எடுப்பதே எமது சமூகத்தின் வெற்றிக்கு முக்கியமாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, நமது பயணத்தை முன்னெடுத்து செல்வதுதான் எமது குழுவின் முடிவாகவும், திடமான தீர்மானமாகவும் இருக்கின்றது.
