follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1சாதாரண தரத்தில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி வாய்ப்பு

சாதாரண தரத்தில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி வாய்ப்பு

Published on

கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இந்த பாடநெறிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 உரையாடல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமன் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் பிரகாரம் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியும், இரண்டாம் ஆண்டில், தொழில் பயிற்சி நிறுவனமொன்றின் ஊடாக NVQ தரச் சான்றிதழ் வழங்கப்படும். NVQ 4 சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் படிப்பு வரை கற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது.ஆனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து விலக்கிச் செல்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமூகத்தை தயார்படுத்தும் வகையில், பாடசாலையின் ஊடாக மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதன் அவசியத்தை உணர்ந்து “13 வருட தொடர்ச்சியான கல்வித் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது என்று சமன் ரூபசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சமன் ரூபசிங்க,

“இத்திட்டத்தின் மூலம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இல்லாவிட்டாலும் தொழிற்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தொழில்வாண்மையாளர்களாக வெளிநாடு செல்ல விரும்பும் பலர், தொழில்சார் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கின்றனர். அவர்கள் தேவையான மொழி அறிவைப் பெறுவதற்கு குறுகிய காலப் பாடநெறிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மோட்டார் மெக்கானிக், வெல்டிங் டெக்னீஷியன், விவசாய உதவியாளர், ஹோட்டல் துறை போன்ற எந்தத் துறையிலும் கணினி அறிவு பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொழிற்துறை தகைமையாக இல்லாத போதும் மேலதிக தகுதியாக இது முக்கியமானது.

சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழிற்கல்வி கற்க முடிவு செய்யும் மற்றவர்களும் உள்ளனர். இவர்களுக்கான தொழிற்கல்வி திட்டங்கள் இலங்கையில் 525 தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. 13 வருட தொடர்ச்சியான கல்வித் திட்டத்தின் மூலம், அவர்கள் பாடசாலைகளில் இருந்தே தொழிற்கல்வியைத் தொடரும் திறனைப் பெற்றுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்படும்.

இந்த தொழில்முறை பாடநெறிகள் யாவும் தொழிற் சந்தையை இலக்காக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழ் திட்டத்தின் மூலம், கடந்த 5-6 ஆண்டுகளில் மிகவும் திறமையான தொழில்சார் நிபுணர்களை உருவாக்க முடிந்தது. அதனால்தான் மாணவர்கள் மத்தியில் இந்தத் திட்டம் பிரபலமாகியுள்ளது.

NVQ 3 மற்றும் NVQ 4 சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளுக்கே நாம் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறோம். அதன் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் UNIVOTEC ஊடாக பட்டப் பின் படிப்பு வரை கற்க வாய்ப்பும் உள்ளது. NVQ 6 சான்றிதழைப் பெற்ற ஒருவர் வெளிநாடுகளில் பட்டப் பின் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. மோட்டார் பொறியியல், வெல்டிங், விவசாயம் மற்றும் ஹோட்டல் தொழில் உள்ளிட்ட 26 துறைகளை உள்ளடக்கி பாடநெறிகள் நடைபெறுகின்றன.

மேலும், உயர் தரத்திற்குப் பிறகு பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட 1,400 தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு விருப்பமான தொழில் பயிற்சியைத் தொடர வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான தகவல்களை www.tvec.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்..”

மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ரூபசிங்கவுடனான உரையாடல் தொடர்பான காணொளிகளை இந்த இணைப்பின் மூலம் பார்வையிடலாம். https://youtu.be/ULhZThZHMTc 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...